தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் அமைந்துள்ள 24 ம் எண் வாக்குச் சாவடியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர். 

இன்று நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வாக்களிக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வாக்களிக்க வந்தனர். காலை 9.05 மணி அளவில் அவர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்தனர்.  

9 மணிக்கு பிறகு ஸ்டாலின் வந்ததால் வாக்குப்பதிவு மையத்தில் பெரிய அளவில் கூட்டம் நிலவியது. இதனால் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் காத்து இருந்தார், வெயிலில் சுமார் 20 நிமிடம் வரை ஸ்டாலின் வரிசையில், மக்களோடு மக்களாக காத்திருந்தார். அதன்பின் 9.25 மணிக்கு வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்; தென் சென்னை தொகுதிக்குட்பட்ட இந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து இருக்கிறேன். நான் தமிழக வாக்காளர்களை  கேட்டுக் கொள்ள விரும்புவது, ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்கு நிச்சயமாக அமைந்திட வேண்டும்.

 எனவே ஒவ்வொருவரும் தவறாமல் தன்னுடைய வாக்குகளை பதிவு செய்ய என்னுடைய பணிவான வேண்டுகோளை வாக்காளர்களுக்கு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த தேர்தல் என்பது ஒரு முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது.
காரணம் 500 ரூபாய் 1000 ரூபாய் 2000 ரூபாய் ஐயாயிரம் ரூபாய் பத்தாயிரம் ரூபாய் என அதையும் தாண்டி சென்னையில் வாக்குகளை வாங்க பணம் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அதையும் மீறி அந்த நோட்டுகளுக்கு அடிபணியாமல் நிச்சயமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வாக்காளர்கள் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனக் கூறினார்.