ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வாக்கு சேகரிக்க சென்றபோது, எல்.கே.ஜி.படிக்கின்ற மாணவன் ரித்தேஷ்  செய்த நெகிழவைக்கும் சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சுவராஸ்யமாக இருந்தது.

ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட குண்டடம் ஒன்றியப் பகுதிகளில் இன்று காலையில் இருந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவருடன் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன்  வாக்கு சேகரித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு கணபதி நகர் பகுதியில் கணிசமான பெண்கள் ஆரத்தி தட்டுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கணேசமூர்த்தியை எதிர்கொண்டு ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு வயதான பாட்டி, சட்டென கணேசமூர்த்தியை கையை பிடித்து இழுத்தார். இவர் ‘என்னங்மா?’ என்றபடி திரும்ப, அவரது சட்டைப் பையினுள் சில நூறு ரூபாய் நோட்டுக்களை வைத்தார் அந்த பாட்டி, வேட்பாளர் அதிர்ந்து போய் ‘இதெல்லாம் வேணாம்! எதுக்கு எனக்கு பணம் தர்றீங்க?’ என்று கேட்டதும்... “நீ மத்த கட்சி அரசியல்வாதி மாதிரி இல்ல கண்ணு.  எலெக்‌ஷன் செலவுக்கு ஏதோ என்னால முடிஞ்ச பணம் கண்ணு இது. வேணாமுன்னு சொல்லாம வெச்சுக்க. நாலு இடத்துக்கு போறப்ப விசாலமா செலவு பண்ணி ஓட்டு கேளு என்று வெள்ளந்தியாய் பேசிய சம்பவம் அந்த பகுதியில் உணர்ச்சிகரமாக அமைந்தது.

கிட்டத்தட்ட அதே போல ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் , நேற்று முன்தினம் முத்தியம்பட்டி பகுதியில் நடந்துள்ளது. ஓட்டு கேட்டு வந்த வேட்பாளர் கணேசமூர்த்தி  பேசியபோது. எல்.கே.ஜி.படிக்கின்ற மாணவன் ரித்தேஷ் வளைத்து…வளைத்து தனது ஆண்ட்ராய்டு போனில் படமெடுத்தார்.

இதை உற்று கவனித்த வேட்பாளர் கணேசமூர்த்தி அந்த சின்னஞ்சிறுவனைப் பார்த்து, நீ என்ன படிக்கிறாய் என்றபோது எல்.கே.ஜி.என்றான் அந்த சிறுவன். என்னை நன்றாக போட்டோ பிடித்தாயா என்றபோது ம்… எனக்கூறி அவன் எடுத்த போட்டோவைக் காட்டினான். நெகிழ்ந்து போன வேட்பாளர் நீ…நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்திவிட்டு…நான் உன்னுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன் எனக்கூறி அந்த சிறுவனை பக்கத்தில் நிறுத்தி படம் எடுத்துக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சுவராஸ்யமாக இருந்தது.