சிறந்த மனிதனாகத் தமிழகத்துக்கான கடமையைச் செய்துமுடித்துவிட்டுத்தான் செத்தான் என்பதுதான் எனக்கு வேண்டும். இப்படிச் சொல்வது டயலாக் கிடையாது. என்னுடைய எஞ்சிய வாழ்க்கை மக்களுக்குத்தான் என பிரசாரத்தில் உருக்கமாக பேசியிருக்கிறார்  நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜயபாஸ்கர், பரமக்குடி சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் சங்கர் ஆகியோரை ஆதரித்து தனது சொந்த மண்ணான பரமக்குடியில் நேற்று கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் கமல் பேசுகையில், இந்த தேர்தல் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது என்று பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனா அதவிட முக்கியம், எம்.பி யார் என்று தேர்ந்தெடுப்பது இந்தத் தேர்தல். நமது குரல் டெல்லியில் கேட்க வேண்டும். சட்டமன்றத்தில் வெள்ளை வேட்டியுடன் சென்று, ஒருவர் பேச மற்றவர்கள் கைதட்டியபடி வந்துவிடுவார்கள் என்றார்.

ஆற்று மணலை திருடி விற்கிறார்கள். நான் குதிரை ஓட்டக் கற்றுக்கொண்டது ஆற்று மணலில்தான். ஆனால், இன்று மணலே இல்லை. களிமண்தான் மிச்சம் இருக்கு. அவங்க திருடியதை விட மூன்று மடங்கு பணம் கொடுக்கிறோம். திருடிய மணலை திருப்பிக் கொட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று கேள்வி எழுப்பினார்.

நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள், சினிமாவிலேயே இருந்திருக்கலாமே என்று சிலர் கேட்கிறார்கள். நான் எப்படி சாக விரும்புகிறேன், இந்த உலகம் என்னை எப்படி நினைவுகூர வேண்டும் நினைத்துப் பார்த்தேன். நல்ல கலைஞன், சிறந்த நடிகன் என்பது எனக்குப் போதாது. சிறந்த மனிதனாகத் தமிழகத்துக்கான கடமையைச் செய்துமுடித்துவிட்டுத்தான் செத்தான் என்பதுதான் எனக்கு வேண்டும். இப்படிச் சொல்வது டயலாக் கிடையாது எனப் பேசினார்.

மேலும்  பேசிய அவர், என்னுடைய எஞ்சிய வாழ்க்கை மக்களுக்குத்தான். இது காசு கொடுத்துக் கூடிய கூட்டம் அல்ல, அன்புக்காகக் கூடிய கூட்டம். தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றுவதுதான் வேலை. இதைப் புரிந்துகொண்டு செய்ய வேண்டியதைச் செய்தால் நிச்சயம் நாளை நமதுதான் என்று உருக்கமாக பேசினார்.