Asianet News TamilAsianet News Tamil

கி.வீரமணியின் குதர்க்கமான கேள்விகள்... இவ்வளவு ஆழமான கேள்விகளா? நீங்களே அசந்து போயிடுவீங்க!

நிர்மலா சீதாராமன் முதல் பொன்.ராதாகிருஷ்ணன் வரை தந்த ஏமாற்று வாக்குறுதிகள் மறந்துவிட்டனவா? சட்டமன்றத்தில் இயற்றிய மசோதாக்களின் கதி என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

K veeramani Asked question against BJP
Author
Chennai, First Published Apr 14, 2019, 6:52 PM IST


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வை முக்கிய பிரச்சினையாக வைத்து பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.  நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதாவை நாம் இழந்தோம். நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

டெல்லிக்கு அனுப்பிய பிறகு அதன் நிலை என்ன ஆனது என்று அதிமுக அரசு எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்று குற்றம்சாட்டி வரும்  ஸ்டாலின் அதிமுக அறிக்கையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று கூறியிருப்பது கண்துடைப்பு நாடகம் என்று விமர்சித்திருந்தார். அதேபோல தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி தமிழகத்தில் இன்னோர் அனிதா உருவாகக் கூடாது என்று கூறியிருந்தார்.

அதிமுக அறிக்கையில் நீட் தேர்வுக்கு மத்திய அரசை வலியுறுத்தி விலக்கு பெறுவோம் என்று கூறியிருந்த நிலையில், பாஜக அறிக்கையில் இதுதொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “நீட் தேர்வைத் தமிழில் நடத்த வேண்டும் என்று மட்டும்தான் அதிமுக கோரிக்கை வைத்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை. இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசி அவர்களைச் சம்மதிக்க வைப்போம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமரைப் பார்த்து ‘தினத்தந்தி’ செய்தியாளர் எடுத்த பேட்டியில், “எனக்குத் தமிழ்நாட்டின் பிரச்சினை தெரியும். பாஜக தேர்தல் அறிக்கையில் பதில் கூறியுள்ளோம்” என்று மற்ற ஏதேதோ கூறி, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை கூறியதைப் போல மழுப்பினாலும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றே மோடி கூறி விட்டார்.  

அதைவிட, பாஜகவின் தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான பியூஷ் கோயல், நீட் பற்றி கூறிய பதில் அதிமுகவைச் சரியாக அடையாளம் காட்டிக்கொடுத்து விட்டது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய கேட்க வில்லையே, தமிழில் எழுத வேண்டும் என்றுதான் கேட்டார்கள் என்று கூறி,  இவர்களை ஒப்புக்கொள்ளச் செய்வோம்” என்றும் கூறியுள்ளார். 

இதில் யார் அண்டப்புளுகர்? யார் ஆகாசப்புளுகர்? தமிழகச் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களின் கதி என்னவாயிற்று? நிர்மலா சீதாராமன் முதல் பொன்.ராதாகிருஷ்ணன் வரை தந்த ஏமாற்று வாக்குறுதிகள் மறந்துவிட்டனவா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios