அதிமுக மீது கொல காண்டில் தேமுதிக, பிஜேபி? சந்திரகுமாரை வைத்து பக்கா ஸ்கெட்ச்! கூட்டிக் கழிச்சு ஒரு கால்குலேஷன்...
அதிமுக வேட்பாளருக்கான வாக்கு சதவீதம் சரியும் என்பதால் அதுவும் தன் வெற்றிக்கு கணிசமாக கைகொடுக்கும் என்று செம்மயாய் கூட்டிக் கழிச்சு கால்குலேஷன் போட்டு களிப்பில் இருக்கிறார் திமுக கூட்டணி வேட்பாளரான கணேசமூர்த்தி.
தங்களின் கூட்டணி தலைவனான அதிமுக மீது கொல காண்டில் தேமுதிக இருக்க காரணம்?... கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை எனும் கோபம்தான். இதனால் திமுகவுக்கு ஆதரவாய் அவர்கள் கரை ஒதுங்குவதும், அதிமுக.வின் அப்ரோச்மெண்டினால் எரிச்சலில் இருக்கும் பிஜேபியினர் ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்துவதும் மொத்தமாய் திமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கு சாதகமாகியுள்ளது.
தங்கள் கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு இடங்களை ஒதுக்கியுள்ளது அதிமுக. இதில் ஒரு தொகுதியை மேற்கு மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, நாமக்கல் போன்றவற்றில் கேட்டது தேமுதிக காரணம், 2011 சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டங்களில் சில தொகுதிகளை வென்றிருந்தது தேமுதிக. எனவே தங்களுகு சாதகமான ஏரியாக்களின் பட்டியலில் எப்போதுமே கொங்குவை வைத்துள்ளது தேமுதிக.
அதனால்தான் குரல் வள சிகிச்சைக்காக முதல் முறை அமெரிக்கா சென்ற விஜயகாந்த், திரும்பி வந்ததும் திருப்பூரில் மெகா மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள ஏற்பாடானது. ஆனால் விஜயகாந்தின் குரலில், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் அந்த மாநாடு கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இப்போது கூட்டணிக்காக பேசியபோதும் கூட மேற்கு மாவட்டங்களில் ஒரு தொகுதியை ஒதுக்கியே தீரணும் என்று தலைகீழாக நின்றனர். ஆனாலும் பாச்சா பலிக்கவில்லை பழனிசாமியிடம். ஆக தங்களுக்கு வாய்ப்பு அருமையாய் உள்ள தொகுதியில் தொகுதி கொடுக்காமல் கைகழுவியதால் அதிமுக. மீது கடும் கடுப்பில் இருக்கிறது தேமுதிக.
இதை புரிந்து கொண்ட திமுக வினர் மெதுவாக இந்த அதிருப்தியாளர்களை அப்ரோச் பண்ணி கரைய வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ஓகே. சொல்லிவிட்டனராம் தேமுதிகவினர். இதன் மூலம் சைலண்டாக தேமுதிக. வாக்கு வங்கியானது திமுக. கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவின் கணேசமூர்த்தியின் பக்கம் சாயும் நிலை உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் தேமுதிகவில் கோலோச்சிவிட்டு பின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அக்கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த ஈரோடு சந்திரகுமாரை வைத்து ஈரோடு நாடாளுமன்ற தொகுதி முழுக்க உள்ள தேமுதிக வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க முழு முயற்சியில் உள்ளது திமுக.
அதேவேளையில் பிஜேபியினருக்கும், அதிமுக தரப்புக்கும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உரசலும்,முறைப்புமாகவே போய்க் கொண்டிருக்கிறது என்று தகவல். ஆளுங்கட்சியினர், சிறுபான்மை வாக்கு வங்கியை கவர்வதற்காக இந்துத்வத்தை பல இடங்களில் உரசிப் பேசுவதால் பிஜேபியினர் கடும் கடுப்பில் இருக்கிறார்கள். இது பற்றி வேட்பாளர் வெங்கு மணிமாறன் வரை விஷயத்தை கொண்டு போயும் எந்த மாற்றமுமில்லையாம். தங்களின் மாநில தலைமைக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றார்கள். ஆனால் தமிழிசையே வேட்பாளராய் தூத்துக்குடியில் வலம் வருவதால் பெரிய எஃபெக்ட் இல்லாமல் போய்விட்டது.
இதனால் மனம் நொந்து இருக்கும் பிஜேபியினர் தங்களின் கோபத்தை தேர்தலில் வெளிக்காட்டும் முடிவில் உள்ளனர். இவர்கள் நிச்சயம் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை. ஆனால் தங்களின் வாக்கு வங்கியை அதிமுகவை ஆதரிக்காத வண்ணம் மாற்றிவிடும் முடிவில் இருப்பதாக தகவல்.
இதன் மூலம் அதிமுக வேட்பாளருக்கான வாக்கு சதவீதம் சரியும் என்பதால் அதுவும் தன் வெற்றிக்கு கணிசமாக கைகொடுக்கும் என்று செம்மயாய் கூட்டிக் கழிச்சு கால்குலேஷன் போட்டு களிப்பில் இருக்கிறார் மதிமுகவின் கணேசமூர்த்தி.