திருச்சியில் தேமுதிக வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, தப்பு தப்பாக உளறியது மட்டும் இல்லாமல், திமுக MLAவுக்கு பாராட்டு தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியான டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, சமீபத்தில், தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய பிரேமலதா, 'திருச்சியில் அரசு கலைக் கல்லுாரி மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். ஆனால், ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட அரசு கலைக்கல்லுாரி மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரி, திருச்சியில் ஏற்கனவே உள்ளது. அது தெரியாமல், பிரேமலதா தவறாக பேசினார்.

அடுத்ததாக திருவெறும்பூர் பகுதியில் பேசுகையில், 'இந்த தொகுதியில், எம்.எல்.ஏ., செயல்பாடு சிறப்பாக உள்ளது' என்றார். அங்கு, தி.மு.க.,வைச் சேர்ந்த மகேஷ் பொய்யாமொழி MLAவாக உள்ளார். கடந்த ஆட்சியில் அங்கு, தேமுதிகவைச் சேர்ந்த செந்தில்குமார், எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அதே ஞாபகத்தில் பிரேமலதா பேசியது, கூட்டத்தில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. அதுமட்டுமல்ல, தொடர்ந்து திருச்சி ஆண்டார் தெருவில் பேசியபோது, தற்போதைய திருச்சி MP குமாரை, முன்னாள், MP என, குறிப்பிட்டார். 

பிரேமலதா உளறல் பேச்சால் அருகில் இருந்தவர்கள், தற்போதைய, எம்.பி.,எனக் சொன்னதை அடுத்து திருத்தி பேசினார். இப்படி கடந்த சில நாட்களாக பிரசாரம் பண்ணும் இடத்திலெல்லாம்  தப்புத் தப்பாக பேசுவதும், தாறுமாறாக உளறுவதும் என பிரேமலதாவின் பேச்சு, பிரசாரத்தில் பங்கேற்ற தேமுதிகவினரை மட்டுமல்ல, அதிமுக கூட்டணி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.