அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பாமக மற்றும் தேமுதிகவிற்கு, அதிமுக சார்பில் பெரும் தொகை கொடுக்கப்பட்டதாம். தேமுதிகவிற்கு கொடுத்ததை  விட, இரு மடங்கு தொகை பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  இரண்டு கட்சியும் வாங்கிய பணத்தில் சல்லி காசு கூட, வேட்பாளர்களுக்கு கொடுக்கலையாம். இரு கட்சி வேட்பாளர்களும், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை சேர்ந்த, மாவட்ட அமைச்சர்களிடம் கேட்டு நச்சரித்து வருகிறார்களாம். 

அமைச்சர்களை, அவர்கள் சொந்த மாவட்டத்தில் உள்ள லோக்சபா தொகுதியுடன், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியின் செலவையும் பார்க்கும்படி, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியும். எனவே, அவர்கள் இடைத்தேர்தலில் தான், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கும் செலவழித்து விட்டு, லோக்சபா தொகுதிக்கும் செலவழிக்க முடியாமல், பல அமைச்சர்கள் சிரமப்படுகின்றனர். 

அவர்கள், பாமக மற்றும் தேமுதிக, வேட்பாளர்களிடம், உங்கள் கட்சி தலைமைக்கு, இவ்வளவு தொகை வழங்கி உள்ளோம். அதனால், அங்கே போய் கேளுங்கள் என, சொன்னார்களாம். அதன்படி, அவர்கள் சென்று கேட்டபோது, அந்த கட்சி தலைமைகள், ஒரு ரூபாய் கூட கிடையாது. தோப்பில் விளைந்த தேங்காயை விற்று தான் கட்சிக்கே செலவு செய்து கொண்டிருக்கிறேன் என பதில் வந்ததாம். இதனால், நொந்து போன, இரண்டு கட்சி வேட்பாளர்களும், கடும் விரக்தியில் உள்ளனர். திமுக கூட்டணியில், அனைத்து வேட்பாளர்களுக்கும், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் உற்சாகமாக உள்ளனர். காங்கிரஸ் மற்றும் பிஜேபி வேட்பாளர்களுக்கு, அவர்கள் தலைமையே பணம் வழங்கி உள்ளது. அமமுக வேட்பாளர்களுக்கும், கட்சி தலைமை கணிசமாக பணம் வழங்கி உள்ளது. இதனால், அவர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தேமுதிக வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுகிறார். தேர்தல் செலவிற்கு போதுமான  காசு கையிருப்பு அவரிடம் உள்ளது. அதேபோல, பாமகவில் மத்திய சென்னையில் போட்டியிடும் சாம் பால், தருமபுரி வேட்பாளர் அன்புமணி, அரக்கோணம் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் தாறுமாறாக எதிரணி செலவு செய்வதைப்போலவே தண்ணியாக செலவு செய்கின்றனர். அனால் மற்ற நான்கு பேரும் பூத் செலவுக்கு கூட காசு இல்லாமல் தவிக்கின்றனர்.

அதேபோல, தேமுதிக வேட்பாளர்களான விருதுநகர் வேட்பாளர் அழகர்சாமி, வடசென்னை மோகன்ராஜ், திருச்சி இளங்கோவன் ஆகியோர் பிரசார வாகனத்துக்கு டீசல் போடக்கூட பணமின்றி, திண்டாடி வருகின்றனர். தேர்தலுக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக - திமுக - அமமுக, வேட்பாளர்கள், பூத் ஏஜன்டுகள் மற்றும் வாக்காளர்களை கவனிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். 

ஆனால், செலவிற்கு பணமில்லாமல், தேமுதிக, வேட்பாளர்கள் மூன்று பேரும் தவித்து வருகின்றனர். வேட்பாளர்களிடம், கடைசி நேர செலவிற்கு, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பணம் கேட்டுள்ளனர். 

ஆனால், இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எவ்வளவு வேணாலும் செலவு பண்ணிக்கோங்க தேர்தல் முடிந்ததும் கொடுக்கிறோம் என்றாராம், ஆனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சல்லி காசு கூட இல்ல நீங்களே பாத்துக்கோங்க என  வேட்பாளர்களை கடைசி நேரம் வரை ஏமாற்றி வருகின்றனர். இந்த இழுபறி கடந்த ஒரு வாரமாக கடந்து, அரங்கேறி வருகிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடுப்பில் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் விரக்தியின்  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.