பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதால், மீண்டும் கதிர் ஆனந்த்  போட்டியிட வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் வேலூர் தேர்தல் நடக்கும்போது திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவியும், துரைமுருகனின் மருமகளுமான சங்கீதாவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. 

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடந்த மார்ச் 30, ஏப்ரல் 1 தேதிகளில் துரைமுருகன் வீடு, மற்றும் சில திமுகவினரின் வீடுகளில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் துரைமுருகனின் நண்பரான சீனிவாசனின்  குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 3ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித் துறை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் செலவின உதவி அலுவலர் சிலுப்பன் காட்பாடி போலீசில் அளித்த புகாரில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுவில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிக பணம் அவரது இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் பிடிபட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வேட்பாளர் கதிர் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையே காரணமாக வைத்து  வேலூர் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த பின்னணியில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலோடு சேர்ந்து நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலூர் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் என்றால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் திமுகவின் வேட்பாளராக ஏற்கனவே நின்ற கதிர் ஆனந்த் நிற்பாரா, நிற்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடைசி கட்ட தேர்தலோடு வேலூர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடும் பட்சத்தில், கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி வற்புறுத்த அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் திட்டமிட்டிருக்கிறார்.  கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்வதற்கான காரணங்கள் வலுவாக இருக்கின்றன என்கின்றனர் எதிர் தரப்பினர்.

இப்படி பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், கதிர் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மீண்டும் வேலூர் தேர்தல் நடக்கும்போது திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவியும், துரைமுருகனின் மருமகளுமான சங்கீதாவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் தீவிரமாக நநடந்து வருகிறதாம். 

ஐடி ரெய்டு சமயத்தில் கதிர் ஆனந்த் சில நாட்கள் பிரச்சாரத்துக்கே போகாமல்  வீட்டிலேயே இருந்தார். அந்த சமயத்தில் பிரசாரத்தை தனது கையில் எடுத்த கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா கழுத்தில் கறுப்பு -சிகப்பு நிற துண்டை போட்டுக்கொண்டு களத்தில் குதித்தார். தனது கணவர் கதிர் ஆனந்துக்காக வேலூர் தொகுதியின் மூளை முடுக்கிலுள்ள கிராமங்களில் சங்கீதா தேர்தல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தார். சங்கீதா செய்த பிரச்சாரத்தால் அதிமுக வேட்பாளரான ஏ.சி..சண்முகமேகடைசி சில நாட்களில் கொஞ்சம் திணறித்தான் போனார்.

இந்நிலையில் மீண்டும் கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு இல்லையென்ற நிலையில், தன் மனைவிக்கு சீட் வேண்டும் என்று கதிர் ஆனந்த் துரைமுருகனிடம் வற்புறுத்தியுள்ளார். துரைமுருகன் இதுபற்றி இன்னும் ஸ்டாலினிடம் பேசவில்லை என்றாலும் மாவட்டம் முழுதும் துரைமுருகனின் ஆதரவாளர்கள் கதிர் ஆனந்துக்கு இல்லையென்றால் அவர் மனைவி சங்கீதாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். காரணம் எந்த பந்தாவும் இல்லாமல் தொண்டர்களிடம் எளிமையாக பழகுவது, கிராமப்புறங்களில் அவருக்கு கிடைத்த வரவேற்பால் ஆதரவு குவிக்கிறதாம். இதனால் ஒரு படி மேலே போய் கதிர் ஆனந்தே தன்னுடைய முகநூலில் இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.

மீண்டும் ஏ.சி. சண்முகம் அதிமுக சார்பாக நிற்கும் பட்சத்தில், சங்கீதாவை திமுக சார்பாக நிறுத்தினால் மரணமாஸ் பைட் கொடுப்பார் என்பதால் சந்தேகம் இல்லை என சொல்கிறார்கள் வேலூர் உபிக்கள். ஏற்கனவே தேர்தலில் நிற்கும் ஆசையை கைவிட்ட நிலையில் சோகத்தில் இருக்கும்  ஏ.சி. சண்முகம் நிற்காவிட்டால், அதிமுக சார்பில் போட்டியிட பல முக்கிய கைகள் இப்போதே சீட் வாங்க முயற்சித்து வருகிறதாம். எந்த எதிர்ப்பலையும் இல்லாமல் வேலூர் திமுகவே துரைமுருகன் பின்னால் நிற்பதால், எப்போ தேர்தல் நடத்தினாலும், கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா தேர்தலில் நிற்க தயாராக இருக்கிறாராம்.