இந்தியாவில் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமாக 543 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியை தவிர மற்ற 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. 

கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மண்டியா, ஷிமோகா, ஹாசன் ஆகிய தொகுதிகளில் வாரிசுகள் களமிறங்கியுள்ளதால் இந்த தொகுதிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. 

காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 22ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. எஞ்சிய 6 இடங்களில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 

மண்டியா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்பி அம்ப்ரீஷின் மனைவி சுமலதாவிற்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. சுமலதாவை எதிர்த்து போட்டியிட்டிருப்பது கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. இந்த தொகுதியில் சுமலதா முன்னிலை வகிக்கிறார். 

ஷிமோகா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜேடிஎஸ்-ன் மதுபங்காரப்பா களம் கண்டார். இந்த தொகுதியில் ராகவேந்திரா முன்னிலை வகிக்கிறார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கேவை விட அதிக வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவ் முன்னிலை வகிக்கிறார்.