ஸ்டாலின் இப்படி செய்யலாமா? இது தான் தர்மமா? அன்புமணி வேதனை...
திமுக தீண்டாமையை கடைபிடித்துக்கொண்டிருக்கிறது, ஆனால் அதிமுக கூட்டணி அனைத்து மக்களுக்கும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என திமுகவின் செயல்களால் அன்புமணி வேதனைப்பட்டுள்ளார்.
திமுக தீண்டாமையை கடைபிடித்துக்கொண்டிருக்கிறது, ஆனால் அதிமுக கூட்டணி அனைத்து மக்களுக்கும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என திமுகவின் செயல்களால் அன்புமணி வேதனைப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் அதிமுக, பாஜகவை விமர்சிக்கும் அதே அளவு பாமகவையும் விமர்சித்துவருகிறார். வன்னியர் கல்வி அறக்கட்டளை பற்றி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் முழுநீள விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்டாலின் - பாமக இடையிலான வார்த்தைப் போர் தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், சென்னை மேடவாக்கத்தில் இன்று தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜெயவர்த்தனை ஆதரித்து பிரச்சாரம் பண்ணிய அன்புமணி, திமுகவை கடுமையாக விமர்சித்துத் தள்ளினார்.
அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் முன்பு திட்டங்களைப் பற்றிப் பேசினார். தற்போது எங்களை திட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் என்னைத்தான் அதிகம் திட்டுகிறார். தனிநபர் விமர்சனங்களை முன்வைக்கிறார், திமுக கூட்டணியில் நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள். கிராமப் புறங்களில் திருமாவளவன் கட்சிக் கொடியோ, பெயரோ போடக்கூடாது என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டுமே கட்சியின் கொடி, பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமாவளவன் அவர் தொகுதியிலேயே உள்ளார். அவரை கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை, இப்படி திமுக கூட்டணிக்குள் நவீன தீண்டாமை உள்ளது. இதை தேர்தல் முடிந்தவுடன் திருமாவளவன் பேச உள்ளார். இப்படியிருக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடும் கூட்டணியா இது? இதற்கு திமுக கூட்டணியில் உள்ளவர்களும் ஸ்டாலினும் பதில் சொல்லி ஆக வேண்டும் என வேதனையாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுக கூட்டணி அனைத்து மக்களுக்கும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.