நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊராட்சி பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற 27 மற்றும் 30 ஆகிய தினங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்து வாக்குகள் ஜனவரி மாதம் 2ம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்தநிலையில் ஊராட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதை மறுத்த தேர்தல் ஆணையம் அவ்வாறு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது.

இந்தநிலையில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பான தகராறில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து விவாதம் வந்தபோது அதிமுக கிளை செயலாளரான ராமசுப்பு, ராம்குமார், சுப்புராஜ் உள்ளிட்டோர் ஒருவர் பெயரை பரிந்துரை செய்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த தனியார் வங்கி ஊழியரான சதீஷ்குமார்(25) 'எங்களை அழைக்காமல் ஏன் கூட்டம் நடத்தினீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தலைவர் பதவியை ஏலம் விட்டதை தடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ராமசுப்பு கோஷ்டியினர் சதிஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட்டதை தடுத்தவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் சதிஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி சதிஷ்குமாரை அடித்து கொலை செய்ததாக அதிமுக கிளை செயலாளர் ராமசுப்பு உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டதை தடுத்தவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் கோட்டைப்பட்டி கிராமத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.