கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இவா டேனியல். 16 வயது சிறுமியான இவர், அங்கிருக்கும் ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சபீர் என்கிற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின் இரண்டுபேரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சபீருடன் பேசுவதை இவா டேனியல் நிறுத்தியுள்ளார்.

தொடர்ந்து சபீர், மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் இவா டேனியல் அவரிடம் பேசவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சபீர், தனது காதலியை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி நேற்று பள்ளிக்கு சென்ற இவா டேனியலை தனது காரில் சபீர் கடத்தி சென்றுள்ளார். இந்தநிலையில் மாணவியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த காவலர்கள் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே வால்பாறை அருகே காரில் வந்த சபீர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவா டேனியலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாணவியை கடத்தி கழுத்தை கத்தியால் அறுத்து கொன்று, உடலை வரட்டுப்பாறை வனப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். கொலை வழக்கில் சபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.