விழுப்புரம் அருகே தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற  போலீஸ்காரர் ஒருவர் அதே துப்பாக்கியால் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் கார்த்திகை வேல். இவர் சென்னையில் காவலராக பணி புரிந்து வந்தார். இவரும் விழுப்புரத்தை அடுத்த அன்னியூரைச் சேர்ந்த சரஸ்வதியும் காதலித்து வந்தனர். 

சரஸ்வதி சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சரஸ்வதிக்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைத்து டாக்டருக்கு படிக்கத் தொடங்கினார். அவர் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் மருத்துவ மாணவியான சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள். அவர் தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் அன்னியூருக்கு  சென்றுள்ளார்.  இதைத் தொடர்ந்து கார்த்திகை வேலும் தனது காதலிக்கு வாழ்த்து சொல்ல அன்னியூருக்கு சென்றுள்ளார். 

இன்று அதிகாலை நேராக சரஸ்வதி வீட்டுக் சென்ற கார்த்திகை வேல், தான் கொண்டு வந்திருந்த கேக்கை அவரிடம் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஆனால் சரஸ்வதிக்கு , கார்த்திகை வேல் அங்கு வந்தது பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. 

இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திகை வேல் தன்னிடம் இருந்த பிஸ்டலை எடுத்து சரஸ்வதியை சுட்டுத் தள்ளினார். இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கார்த்திகை வேலும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கோலை செய்து கொண்டார்.

சரஸ்வதி நர்சிங் படித்தபோது கார்த்திகை வேலை சின்சியராக காதலித்தாகவும், ஆனால் எம்பிபிஎஸ் படிக்கத் தொடங்கியவுடன் அவரை வெறுத்து ஒதுக்கி  வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் கார்த்திகை வேல் அவரை விடாமல் தொடர்பு கொண்டு பேசி வந்திருக்கிறார்.

 இந்நிலையில் இனி தன்னை சந்திக்க வேண்டாம் என்று சரஸ்வதி , கார்த்திகை வேலிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அவர் சரஸ்வதியை சுட்டுக்  கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.