செக்ஸ் டார்ச்சர்! இயற்கைக்கு மாறான வன்புணர்வு! ஆண்களிடம் சிக்கி சீரழிந்த சிறுவர்கள்: ‘அபகரிப்பு’ பூதம்’ உடைத்த பாலியல் வக்கிரம்.

தமிழ்நாட்டில் திரும்பிய திக்கெல்லாம் ‘பாலியல் வன்கொடுமை’ புகார்கள் பேயாட்டம் போடுகின்றன. பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான வழக்கு, சென்னையில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் நடத்திய கொத்தான ஆண்கள், தஞ்சையில் டில்லி பெண்ணை கடத்திக் கற்பழித்த இளைஞர்களுக்கு சாகும் வரை சிறை, கோவையில் சிறுமியை சீரழித்துக் கொன்றவன்....என்று மனம் சுளிக்க வைக்கும்  விவகாரங்கள் தறிகெட்டு ஓடுகின்றன. 

இந்த லிஸ்டில் தற்போது சென்னையில் ஆண் பிள்ளைகளும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு விவகாரமும் சேர்ந்துள்ளது. அந்தப் பெருங்கொடுமை கதை இதுதான்....

சென்னை பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் சதானந்தபுரத்தில், ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் மடம் என்ற ஒரு அமைப்பு உள்ளது. இதில் அநாதை ஆசிரமமும் உள்ளது. தனியார் நபர் ஒருவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது இயங்கி வருகிறதாம். இங்கே ஆறாம் வகுப்பு முதல்  பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் ஒன்பது சிறுவர்கள், வளர் இளம் சிறுவர்கள் தங்கியிருந்திருக்கின்றனர். 

இந்த நிலையில், இந்த ஆசிரமத்தின் நிர்வாகிகள் மீதுதான் சமீபத்தில் ஓரின சேர்க்கை பாலியல் புகார் வெடித்துக் கிளம்பியுள்ளது. சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் எனும் வழக்கறிஞர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரணை செய்யும் போலீஸிடம் இதற்கான புகாரை அளித்தார். கூடவே,  மடத்தின் நிர்வாகிகளால் பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளாக்கப்பட்டு, உடலில் காயத்தோடு இருப்பதாக கூறி, அச்சிறுவர்களை துணை கமிஷனர் ஜெயலட்சுமி முன் ஆஜர்ப்படுத்தினார். 

இதன் பின் துணை கமிஷனரின் உத்தரவின் பேரில் தாம்பரம் போலீஸ் விசாரணையில் இறங்கி, மடத்தை கைக்குள் கொண்டு வந்து அலசி ஆராய்ந்தது. அதன் முடிவில், ஆசிரம நிர்வாகிகள் ஆனந்தன் மற்றும் சம்பத் ஆகியோரால் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படதாக  சிறுவர்கள் அங்கு வைத்தும் வாக்குமூலம் தந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அந்த நிர்வாகிகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். அந்த ஆசிரமும் மூடப்பட்டு, அச்சிறுவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். 

இந்த விவகாரம் பற்றி துணைக் கமிஷனர் ஜெயலட்சுமியோ “அந்த மடத்தில் மகளிர் போலீஸ் நடத்திய விசாரணையில், சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், இயற்கைக்கு மாறான வன்புணர்வு செய்யப்பட்டதும்  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நிர்வாகிகள் இருவர் மீதும் வழக்கு பாய்ந்திருக்கிறது.” என்கிறார். தாம்பரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி “பாவம், அந்த சிறுவர்கள். பாலியல் தொல்லை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது உறுதியானது. சிறுவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்ததில் இவை அனைத்தும் உறுதியாகியது.” என்கிறார். 

பெண் குழந்தைகளுக்குதான் பக்கத்து வீடு, பள்ளி, டியூசன் சென்டர் என்று  பாலியல் துன்புறுத்தல் ஆபத்து இருக்கிறதென்றால், ஆண் குழந்தைகளையும் இந்த மிருகங்கள் விடுவதில்லை என்பதுதான் கொடூரமே. 

இந்த விவகாரத்தில் ஒரு புது திருப்பமாக இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. அதாவது அந்த ஆசிரமம் இருக்கும் பகுதியான நெடுங்குன்றம் கிராம மக்களோ “ஆக்சுவலாக இந்த மடத்துக்கு சொந்தமா 4 ஏக்கர் நிலமிருக்குது. இதில் சின்ன பகுதியில்தான் ஆசிரமம் இருக்குது, மீதி இடமெல்லாம் சும்மாதான் கெடக்குது. இந்த காலி இடத்தின் மேலே அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கு ஒரு கண். இந்த இடத்தை எப்படியாவது வளைச்சுடணும்னு நினைக்கிற நபர்களில்  இந்த வழக்கறிஞர் சசிகுமாரும் ஒருவர். இது தொடர்பாக அவர் மடத்திடம் பேசிப்பார்த்தப்ப, அவங்க உடன்படலை. அதனால் இந்த பாலியல் அத்துமீறலை கண்டுபிடிச்சு வெளியே கொண்டுவந்துட்டார். 

இந்த புகாரை கொடுத்து, கைது அதுயிதுன்னு போறப்ப நிர்வாகம் தன்னிடம் சரணடைந்துடும் என்பதே சசிகுமாரின் எதிர்பார்பு. எது எப்படி இருந்தாலும், மடத்தில் பாலியல் குரூரங்களுக்கு ஆளான சிறுவர்களுக்கு இப்போது விடுதலையும், பாதுகாப்பும் கிடைத்ததே அது நிம்மதி.” என்கிறாரகள்.

ஹும், இன்னும் என்னென்ன குரூரங்களையெல்லாம் பார்க்கவேண்டுமோ இந்த உலகம்!

-    விஷ்ணுப்ரியா