கடையில் வேலைபார்க்கும்  இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் செய்த கடை உரிமையாளரின் உறவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  

சென்னை சூளை ராகவா தெருவை சேர்ந்த ராஜூவின் மகள் கலா ரேவதி பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். அமைந்தகரையை சேர்ந்த முகமது மன்சூர், இந்த கடை உரிமையாளரின் உறவினர் என்பதால் அடிக்கடி கடைக்கு வந்து செல்வது வழக்கம். 

அப்போது, அந்த கடையில் வேலை பார்க்கும் கலா ரேவதியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் முகமது மன்சூர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கலா ரேவதியிடம் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். எனினும், பல்வேறு ஆசை வார்த்தை கூறி, கடந்த வாரம் கலா ரேவதியை முகமது மன்சூர் காரில் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, கலா ரேவதியிடம், போலி திருமண பதிவு சான்றிதழ் ஒன்றை காண்பித்துள்ளார். அதில், கலா ரேவதிக்கும், முகமது மன்சூர் ஆகிய இருவருக்கும் குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து கலா ரேவதி அதிர்ச்சியடைந்தார். 

பின்னர், எனது ஆசைக்கு இணங்காவிட்டால், இந்த சான்றை பலரிடம் காட்டி உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள முடியாதபடி தடுத்து விடுவேன், என்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே, வேலைக்கு சென்ற மகள் கலா ரேவதி வீடு திரும்பவில்லை என்று அவரது தாய் அன்னாவரம்  என்பவர், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், கலா ரேவதியின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மகளிர் தங்கும் விடுதியில் இருப்பது தெரிந்தது. போலீசார் அவரை மீட்டனர். பின்னர், தலைமறைவாக இருந்த முகமது மன்சூரை பிடித்து விசாரணை நடத்தினர்.
 
அதில், முகமது மன்சூர்க்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதும், அதை மறைத்து கலா ரேவதியை காதலிப்பதாக கூறி, காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அவரை கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்க வைத்ததும் தெரிந்தது. பின்னர், முகமது மன்சூர் மின்ஹாஜ் மீது  வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.