புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுப்பணித்துறை ஊழியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (45). பொதுப்பணித்துறை ஊழியர். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். லோகநாதன் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அவர் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். 

அப்போது, குருசுக்குப்பம் மாதா ஆலயம் அருகில் வந்த போது மூகமுடி அணிந்து இருந்த 7 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் லோகநாதனை வழிமறித்தது. இவர்களிடம் இருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது.

 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடிவந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் கொலைக்கு பழிக்குபழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.