சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே இருக்கிறது வேடுகாத்தாம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிந்தாமணி(48). சிந்தாமணியின் தாய் ஆராயி(75) ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அழைத்து கொண்டு மேய்ச்சலுக்கு செல்வது அவரது வழக்கம். சம்பவத்தன்று வீட்டின் அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தில் ஆராயி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்து கண்ணன் என்பவர், மானாவாரி நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று கூறியுள்ளார். மூதாட்டியிடம் தகராறு செய்த கண்ணன், அவரை பிடித்து கீழேயும் தள்ளி இருக்கிறார். இதையறிந்த சிந்தாமணி, கண்ணனிடம் சென்று தாயை தாக்கியதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது மாமனார் பழனிசாமி, சிந்தாமணியை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.

மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து சிந்தாமணியின் தலையில் அவர்கள் ஓங்கி அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சிந்தாமணி ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிந்தாமணி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். சிந்தாமணியை தாக்கி கொலை செய்ததாக பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Also Read: 15 வயது சிறுமியிடம் எல்லைமீறிய கொடூரர்கள்..! ஆபாச படம் எடுத்து அட்டகாசம்..!