காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சிவகுமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இவரது மனைவி சந்திரா. ஐவரும் வீட்டில் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில  நாட்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தன்னிலை மறந்து சிவகுமார் கீழே விழுந்து கிடந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில்  கிழே தவறி விழுந்து இறந்து விட்டதாக முதலில் சொல்லப்பட்டது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சிவகுமார் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் மதனலட்சுமி போலீசில் புகார் கொடுத்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் பிரேதபரிசோதனை அறிக்கையில், சிவகுமார் விஷம் கொடுக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் சிவகுமாரின் மனைவி சந்திராவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரும், அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமாரின் சகோதரர் ராஜமாணிக்கத்தின் மனைவி மாரியம்மாளும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.
 
மேலும், இந்த கொலையை மறைக்க மதுவை வாயில் ஊற்றி, மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். அதேபோல மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக அனைவரையும் நம்ப வைத்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து சந்திராவையும், மாரியம்மாளையும் போலீசார் கைது செய்தனர். தம்பி மனைவி மாரியம்மாளுக்கு சிவகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததால், வீட்டிற்க்கே சென்று கதவை தட்டி தொல்லை கொடுப்பாராம், எவ்வளவு சொல்லியும் கேட்காததால் இருவரும் சேர்ந்து அவரை தீர்த்து கட்டியதால் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.