அமிர்தி காட்டு பகுதியில் கல்லூரி மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் கோட்டை பூங்காவில் காதலுடன் இருந்த இளம்பெண்ணை கத்திமுனையில் 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது. 

வேலூர் அடுத்த அமிர்தியில் உள்ள வன உயிரின பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காலை முதல் மாலை வரை மட்டுமே வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவி அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் மாணவியை அமிர்தி பூங்காவிற்கு அழைத்து சென்றார். இதுபற்றி அவரது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 4 பேரும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக மாணவியை அவரது காதலன் அமிர்தி பூங்காவில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது நண்பர்கள் 3 பேர் தயாராக இருந்தனர். அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க மாணவி போராடினார். இதில் அவரது ஆடைகள் கிழிந்தன. தொடர்ந்து மாணவி கூச்சலிட்டார். அப்போது அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.

மாணவியின் சத்தம் கேட்டு முதியவர் அருகே ஓடிச் சென்றார். அப்போது கும்பல் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த முதியவர் விறகு வெட்டும் அரிவாளை காண்பித்தும் மிரட்டினார். மேலும் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தார். காட்டுக்குள் இருக்கும் மலை கிராம மக்கள் தொடர்ந்து விசில் அடித்தால் ஆபத்து என அர்த்தம். விசில் சத்தம் கேட்ட மலைகிராம மக்கள் அந்த பகுதிக்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மாணவியை அவர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் ஒரு விறகு கட்டை பிடிபட்ட வாலிபரின் தலையில் தூக்கிவிட்டு அவரை மலை கிராமம் வரை சுமக்க செய்தனர் .மேலும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

செல்போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அலறிக்கொண்டு காரில் வந்த பெற்றோர் மகளை அழைத்து கொண்டு சென்றனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.