மதுரையில் முன்விரோதம் காரணமாக பெற்ற தாய் கண்முன்னே சகோதரர்கள் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை எல்லீஸ்நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையத்தேவர். இவரது மகன்கள் முருகன் (45), வெள்ளிக்கண்ணு செந்தில் (40). பிரபல ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை திடீர்நகர் பகுதியில் உறவினர் ஒருவர் இறப்புக்கு சென்று விட்டு அண்ணன், தம்பி இருவரும் வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன்பு குளித்து விட்டு வெளியே அமர்ந்திருந்தனர்.

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். திடீரென்று அவர்களை சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடிக்க உயிரிழந்தனர். இதனை நேரில் பார்த்த தாய் கதறி துடித்தார். ஒரே நேரத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கொலையாளிகளை பிடிக்கும் வரை இருவரின் உடலையும் எடுக்கக் கூடாது என்று தகராறு செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ரவுடிகளான அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.