செல்போனில் பேசி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்த தனது கணவரின் அக்கா கணவரை இளம்பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (30). இவரது மனைவி நிரஞ்சனா (23). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளது. பாண்டீஸ்வரனின் அக்காள் ராஜேஸ்வரி (33). அவரது கணவர் மணிகண்டன் (36). வாழை இலை வியாபாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

மணிகண்டன் குடும்பத்துடன் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்தனர். மணிகண்டன், உறவினர் என்பதால் பாண்டீஸ்வரனின் மனைவி நிரஞ்சனாவை அடிக்கடி நேரில் வந்து பார்ப்பது, சில நேரங்களில் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதனால், பாண்டீஸ்வரனுக்கும், நிரஞ்சனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுதுள்ளது.

இந்நிலையில், மணிகண்டன் மீண்டும் நிரஞ்சனாவிடம் செல்போனில் பேசி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும், சம்பவத்தன்று பாண்டீஸ்வரன் வேலை தொடர்பாக வெளியூர் சென்றிருந்த வேளையில், அவரது வீட்டிற்கு சென்ற மணிகண்டன், நிரஞ்சனாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். மேலும், அவருக்கு தெரியாமல் பாலில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஆபாச படத்தை செல்போனில் பதிவு செய்து மிரட்டி வந்துள்ளார். நிரஞ்சனா நடத்தை குறித்து அவதூறாகப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக நிரஞ்சனா தன் கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால், இரு குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. எனினும் மணிகண்டன் தனது அவதுாறுப் பிரசாரத்தை நிறுத்தவில்லை. சனிக்கிழமை அன்று மணிகண்டனை நேரில் சந்தித்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசிவிட்டு வரலாம் என பாண்டீஸ்வரனும், நிரஞ்சனாவும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

அப்போது வாழை இலை அறுக்கும் வேலைக்காக மணிகண்டனும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் பேச்சுவார்த்தை நடத்திய போதுதான் வாக்குவாதம் ஏற்பட்டடது. பின்னர், நிரஞ்சனா மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த ராஜேசுவரிக்கும் வெட்டு விழுந்தது. இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, நிரஞ்சனாவும் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கணவரின் அக்கா கணவரை மனைவி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.