கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே காதல் பிரச்சனையில் தன்னை தாக்கியவர்களை தண்டிக்காததால் கடவுள் சிலையை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் அம்மன் சிலை சேதப்பட்டிருந்தது கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசாருக்கு தெரிய வந்தது. கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம் எனக் கூறி வழக்கு  பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விசாரணையின்போது கோயிலின் அருகில் செல்போன் ஒன்று கிடைத்தது. அதனை வைத்து விசாரணை நடத்திய போது அந்த செல்போன் யாருடையது என தெரிய வந்தது. செல்போனுனின் உரிமையாளர் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையை சேர்ந்த பால்துரை என்பது மகன் ரமேஷ்  என்ற இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று விசாரித்தனர். 

விசாரணையில் ரமேஷ் அந்தப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்ததாகவும், இதனை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் கடந்த கோயில் திருவிழாவின் போது அவரை தாக்கியதாகவும் கூறியுள்ளார். காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினர் தன்னை தாக்கியதால் மன வேதனையடைந்து அகஸ்தீஸ்வரத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றதாகவும், அங்கிருந்த அம்மன் சாமியின் சிலையின் முன்பு, தன்னைத் அடித்து காயப்படுத்தியவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டுமென வேண்டுதல் செய்ததாகவும் அவர் கூறினார்.

 

ஆனால் காதலியின் உறவினர்களுக்கு அம்மன் எந்த தண்டனையையும் வழங்கவில்லை என்பதால் “நீ இங்கு இருந்து என்ன பிரயோஜனம்”என்று கூறி கோயிலின் உட்பக்கமுள்ள ஜன்னலை திறந்து அம்மன் சிலையை உடைப்பதற்காக ஒரு பெரிய கம்பை எடுத்து  தாக்கியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த பகுதியில் உள்ள மக்கள் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கொடுத்த தகவலின்படி போலீசார் ரமேஷை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை தாக்கிய காதலியின் உறவினர்கள் தண்டிக்கப்படவில்லை என்று அம்மன் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.