சென்னையில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்த இளைஞர்களைக் கைது செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர்.

வேலைக்காகச் சென்னைக்கு வரும் வடமாநில பெண்களை பாலியல் தொழிலில் ஆளாக்குவது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் தரகர்களின் நெட்வொர்க்கை பிடிக்கச் சென்னை பெருநகர ஆணையரின் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேகமே வராமல் பாலியல் தரகர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் நெடுஞ்சாலை பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, வில்லேஜ் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பிறகு சோழிங்கநல்லூர் வில்லேஜ் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள 29வது குறுக்கு தெருவைக் கண்காணிக்கும் போது அங்கு இருந்த ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடந்து வருவதை உறுதி செய்துள்ளனர். மேற்கண்ட விவரத்தின் படி அந்த வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தி வைத்த பிரசாந்த் மற்றும் பசுபதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். பெரும்பாலும் வேலை நிமித்தமாகச் சென்னைக்கு வரும் பெண்களில் வடமாநிலத்தவரே இது போன்ற தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேடி வரும் வேலை கிடைக்காததால், அதைப் பயன் படுத்திக்கொள்ளும் தரகர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்பது போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் தொழிலில் புகுத்தி விடுகின்றனர்.