ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த படுபாதக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்திலுள்ள அல்வண்டியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார் அனிதா[பெயர் மாற்றப்பட்டுள்ளது]. அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட்டு வந்த அவர் நேற்று தன் தந்தையிடம் ‘இனி தான் எந்தக்காலத்திலும் பள்ளிக்குச் செல்லப்போவதில்லை’ என்று முரண்டு பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதாவின் தந்தை ராமண்ணா[பெ.மா] தன் மகளை மிகவும் வற்புறுத்தி பள்ளிக்கு அனுப்ப வாக்குவாதம் செய்தபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

உடைந்து அழுதபடி தனது தந்தையிடம் உண்மையைக் கூறிய அனிதா தனது பள்ளி ஆசிரியர் இப்ராஹிம் தன்னிடம் தொடர்ந்து தகாத முறையில் நடந்து வருவதாகவும், தினமும் தனது அறைக்கு வரச்சொல்லி அவரது மடியில் உட்கார்ந்து முத்தம் தரச்சொல்லி தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், பள்ளி வளாகத்தில் எங்கே அவரைப் பார்த்தாலும் தான் பதுங்கிப் பதுங்கியே நடமாடிவருவதாகவும் அழுதபடியே கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராமண்ணா தனது அண்டை வீட்டார்கள், நண்பர்கள் சிலரை திரட்டிக்கொண்டு பள்ளிக்குச்சென்று தலைமை ஆசிரியரிடம் இப்ராஹிம் குறித்து புகார் செய்தார். அப்புகாரைப் பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர் மாணவியின் தந்தையையும் அவருடன் வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு அல்வண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரை ஒட்டி உடனே ஆசிரியர் இப்ராஹிமை கைது செய்த போலிஸார் அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.