கோவை எஸ். என்.எஸ் கல்லூரி உரிமையாளர்கள் இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணம் பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவரை உரிமையாளர் விரட்டி விரட்டி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. தான் அத்துமீறுவதை இளம் பெண் செல்போனில் பதிவு செய்திருப்பதை அறிந்த உடனயே அவரை பணியில் இருந்து உரிமையாளர் சுப்ரமணியம் நீக்கியுள்ளார். 

இதனை தொடர்ந்து அந்த பெண், காவல் நிலையத்தில் சுப்ரமணியம் மீதும் புகார் அளித்திருந்தார். அதாவது தன்னை எஸ்.என்.ஸ் கல்வி குழும தலைவர் சுப்ரமணியம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஆதாரத்திற்காக தான் வீடியோ எடுத்ததை தெரிந்து கொண்டு தற்போது தன்னை வேலையை விட்டு நீக்கிவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்திருந்தார். மேலும் சுப்ரமணியத்தால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் அந்த பெண் கோரியிருந்தார். 

இந்த புகார் குறித்து சுப்ரமணியத்திடம் போலீசார் விசாரித்த போது, அந்த இளம் பெண்ணின் அனுமதியுடன் தான் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த பெண் எடுத்த வீடியோவை வைத்து தற்போது சிலர் தன்னிடம் 60 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயல்வதாகவும் சுப்ரமணியம் கூறியிருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காவல் நிலையத்தில் அளித்த புகாரை அந்த இளம் பெண் வாபஸ் பெற்றுள்ளார்.

 

சுப்ரமணியம் தன்னிடம் அத்துமீறிய விவகாரத்தை பெரிதாக்க விரும்பவில்லை என்று கூறி அந்த பெண் புகாரை வாபஸ் பெற்றுச் சென்றுவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் சுப்ரமணியம் பேசிய சமாதானப்பேச்சை தொடர்ந்தே அந்த பெண் புகாரை திரும்ப பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் வீடியோவை வைத்து கல்லூரி உரிமையாளர் சுப்ரமணியத்தை மிரட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.