ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் குடும்பத்தகராறில் தனது கணவரை கொன்றுவிட்டதாக பாண்டியம்மாள் என்ற பெண் சரணடைந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்த போலீசார் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்த கணவர் முனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து பாண்டியம்மாளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. முனியாண்டி- பாண்டியம்மாள் தம்பதியினரின் மகன் பாண்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து கால்களை இழந்தவர். இதையடுத்து  பாண்டியும் அவரது மனைவி மலரும் முனியாண்டி குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

பாண்டி -  மலர் தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் முனியாண்டி அவ்வப்போது மருமகள் மலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்ததும் பாண்டியம்மாள் முனியாண்டியை கண்டித்துள்ளார். 

ஆனாலும் முனியாண்டி தனது நடவடிக்கைகளை மாற்றி கொள்ளாமல் பாலியல் தொல்லையைத் தொடரவே அவரை தீர்த்துக்கட்ட பாண்டியம்மாள் முடிவு செய்துள்ளார். அதன்படி 3 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை வைத்து கணவர் முனியாண்டியை பாண்டியம்மாள் கொலை செய்துள்ளார். 

பாண்டியம்மாளின் இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து  அவரை கைது செய்த போலீசார் கூலிப்படை கும்பலை தேடி வருகிறார்கள்.