தஞ்சாவூர், ஒரத்தநாடு அடுத்த திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், திருநெல்வேலி, சங்கரன்கோவிலைச் சேர்ந்த சாரங்கபாணி என்பவர் ஆசிரியராக பணியாற்றினர். திருமணமாகாதவர்.

இவர், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பாடம் எடுத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக, இவர் மீது, மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, சாரங்கபாணியை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்தனர்.

இந்த நிலையில் சாரங்கபாணி, திருவோணம் பள்ளிக்கு, மீண்டும் மாறுதல் வாங்கி, நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினார். இதை அறிந்த பெற்றோர், பள்ளியின் முன் திரண்டு, ஆசிரியருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அப்போது, அதே பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர், ஆசிரியர் சாரங்கபாணி, மாணவியரை தனியாக அழைத்து, மொபைல்போனில் ஆபாச படம் காட்டியதாக, புகார் அளித்தார். இதையடுத்து அங்கிருந்த பொது மக்கள் ஆசிரியர் சாரங்கபாணிக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து, இந்த வழக்கு, பட்டுக்கோட்டை மகளிர் போலீசாருக்கு உடனடியாக மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, ஆசிரியர் சாரங்கபாணியை கைது செய்தனர்.