உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்ப பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நபர்கள் 
பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 30 வயது பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது முசாபர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

ஆனால், அந்தப் பெண்ணை புகாரை திரும்பபெற பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் தொடர்ந்து மிரட்டி வந்தனர். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அந்தப் பெண் மீது ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதனையடுத்து, அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.