மதுவுக்கு புகழ் பெற்ற புதுச்சேரி மதுப்பிரியர்களின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வரும் நிலையில் தற்போது விபச்சாரம் தொழில் கொடிகட்டி பறக்கிறது. முக்கியமாக சுற்றுலா வரும் ஐடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விபச்சாரம் தொழில் அமோகமாக நடைபெறுகிறது. 

புதுச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கிருமாம்பாக்கம் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தனுசு, செல்வம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், அழகு நிலைய வேலைக்காக என்று கூறி அவர்களை அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து, விசா போன்ற எந்தவித ஆவணங்களும் இல்லாமல், இந்தியாவுக்குள் நுழைந்து சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்காளதேச இளம்பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்தனர்.