தாம்பரம், செங்கல்பட்டில் வடமாநிலத்தை சேர்ந்த சிறுமிகளை மர்மகும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகிறது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களாக வட மாநில சிறுமிகள் மற்றும் பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபத்தி வருவதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தொடர்ந்து தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில்,  போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்,தாம்பரம் மற்றும்  செங்கல்பட்டு ரயில் நிலையங்களில், வடமாநிலத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் மாற்றுத்திறனாளிகள் போல் சுற்றி திரிந்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார், அந்த சிறுமிகளை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளை போல் நடித்தது தெரியவந்தது. மேலும், மர்ம கும்பல் ஒன்று அந்த சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், அந்த சிறுமிகளிடம் இருந்து போலி ஆதார் கார்டுகள், போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததை தொடர்ந்து போலீசார் இருவரையும் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல குழும அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதிகாரிகள், அந்த சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில்; மராட்டிய மாநிலம் மற்றும் பல்வேறு வடமாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சிறுமிகளை புரோக்கர்கள் மூலமாக அழைத்து வரும் அந்த மர்மகும்பல் சென்னையின் பல்வேறு இடங்களில் அவர்களை விபசாரத்தில் ஈடுபத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மாற்றுத்திறனாளிகள் போல் நடிக்க வைத்து சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இந்த கொடூர கும்பல் அரங்கேற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும், இளம் பெண்கள் சிறுமிகளை அழைத்துவந்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் யார்? இவர்களின் பின்னணியில் எத்தனை பேர் உள்ளனர்? இவர்கள் எத்தனை பெண்களை தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்? என்பது குறித்து குழந்தைகள் நல டீம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.