தஞ்சாவூர் மாவட்டம் சூரியப்பட்டியை சேர்ந்தவர் ராமையன். இவரது மனைவி புஷ்பவள்ளி. இந்த தம்பதியினருக்கு முருகானந்தம் என்கிற மகன் இருக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முருகானந்தத்திற்கும் கோவிந்தராஜன் என்பவரின் மகள் சங்கீதா என்கிற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில நாட்களில் இருந்தே சங்கீதாவை அவரது மாமியார் மற்றும் கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றனர். கணவர் முருகானந்தமும் அதுகுறித்து எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.

எனினும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதா தனது பெற்றோரிடம் மாமியாரின் கொடுமைகளை கூறாமல் மறைத்து  தாங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனிடையே சங்கீதா கர்ப்பம் தரித்துள்ளார். அப்போதும் இரக்கம் கொள்ளாத அவரது மாமியார் புஷ்பவள்ளி தொடர்ந்து அவரை கொடுமைப்படுத்தி தாக்கியிருக்கிறார். இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவை கடந்த 4ஆம் தேதி மீண்டும் கொடுமை செய்த புஷ்பவள்ளி, தனது குடும்ப வாரிசு வளர்கிறது என்பதையும் எண்ணாமல் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சங்கீதாவின் வயிற்றுப்பகுதியில் ஊற்றி தீவைத்து எரித்து இருக்கிறார். இதனால் அலறிதுடித்த சங்கீதாவை அவரது கணவர் முருகானந்தம் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தீக்காயத்தால் உயிருக்கும் போராடும் சங்கீதாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தொடர்ந்து தாயும் சேயும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். அதில் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு யார் காரணம்?, இதுவரையில் கணவர் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்தும் சங்கீதா விரிவாக கூறியிருக்கிறா.ர் மேலும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனது குழந்தையை கணவரிடமோ அவரது குடும்பத்தினரிடமோ கொடுக்க வேண்டாம் என்றும் தனது பெற்றோரிடம் கொடுத்து விட வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புஷ்பவள்ளியை கைது செய்துள்ளனர்.  

கர்ப்பிணி மருமகளை உயிருடன் கொழுத்திய மாமியாரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.