பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்,  திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். பின்னர் 5-வது நபரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்தது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 27-ம் தேதி சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனைதொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிபிஐ போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சாலையை அடுத்த சின்னப்பம்பாளையம் பகுதியிலுள்ள அவனுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் கருணாநிதி தலைமையிலான 4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 20 நிமிடங்களுக்கு மேலான இந்த சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த வந்த சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசு வீட்டில் முதன்முதலில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையை சிபிஐ வசம் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐயிடம் மாற்றப்பட்ட பிறகு முதன் முறையாக திருநாவுக்கரசு வீட்டில் தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.