மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரத் தொழில் நடத்திவந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

வேலூர் கொசப்பேட்டை நல்லான்பட்டறைத் தெருவில் இளைஞர் ஒருவர் வீடு வாடகைக்கு எடுத்து  மசாஜ் சென்டர் நடத்திவந்தார். இங்கு அறிமுகமில்லாத இளம்பெண்கள் அடிக்கடி வந்துசென்றனர். 

இது பற்றி தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையிலான போலீஸார், மசாஜ் சென்டருக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு 4 இளம்பெண்கள் இருந்தனர். விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த  ஷபீக் என்பவர், மசாஜ் சென்டர் பெயரில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்தது தெரிந்தது.  இதையடுத்து, ஷபீக்கை கைது செய்த போலீஸார், அங்கிருந்த  இளம் பெண்களையும் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மசாஜ் சென்டர் என்கிற பெயரில் நகரத்தின் முக்கிய பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ கஸ்டமரை அழைத்து, விபச்சார தொழில் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

எனவே, பொதுமக்கள் தவறான மசாஜ் சென்டர்களைப் பயன்படுத்த வேண்டாம். தவறான மசாஜ் சென்டர் நடத்துபவர்கள் மற்றும் இதுபோன்ற செயல்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.