உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்து உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் வந்தார். அப்போது குற்றவாளிகள் இருவர் மற்றும் கூடுதலாக மூன்று பேர் என ஐந்து பேர் சேர்ந்து அப்பெண்ணை வழிமறித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

உடலில் 90 சதவீத தீக்காயங்களுடன் இளம் பெண் , லக்னோ எஸ்.பி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். பின்பு, மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மிகவும் மோசமான நிலையில் இருந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், நள்ளிரவில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தீ வைத்த குற்றத்திற்காக , அந்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.  குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. இந் நிலையில் பாதிக்கப்பட்டு எரிக்கப்பட்டு பின்னர் மரிக்கப்பட்ட அந்த பெண்ணின் சடலம், அவரது சகோதரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அப்போது இனி எரிக்க என்ன இருக்கிறது? எமது சகோதரியை புதைத்துவிடுகிறேன் என அந்தப்பெண்ணின் சகோதரர் வருத்தமான வார்த்தைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.