17 ஆண்களை திருமணம் செய்து கொண்டு தன்னையும் ஏமாற்றியதாக மேகலா மீது புகார் கூறிய புதுமாப்பிள்ளை பாலமுருகன் இப்போது காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாகி உள்ளார். 

கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 35 வயதான பழைய தங்கம், வைர நகைகளை, ஏலத்தில் எடுத்து விற்று வந்த இவர் சேலம் எஸ்.பி., தீபா கானிகேரிடம் அளித்த புகாரில், ’’தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், வெளிநாட்டில் வேலை தேடிவந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்தேன். அதைப்பார்த்து சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே மருளையம்பாளையத்தைச் சேர்ந்த மேகலா தொடர்பு கொண்டு 2016 செப்டம்பரிலிருந்து என்னிடம் பேசி வந்தார்.

 

குடும்பம் ஏழ்மையில் இருப்பதாக பேசியதால் அது உண்மை என நம்பி, பணம், நகை, வீட்டுக்கு தேவையான பொருட்கள் என 25 லட்சம் ரூபாய் வரை என்னிடம் பெற்றுள்ளார். திருமண பேச்சை தொடங்கினால் அதை தள்ளிவைத்து, என்னிடம் பேசுவதை குறைத்துக் கொள்வார். இதனால் எனக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று அவரது மொபைல் போனை எடுத்து பார்த்தேன். 

அப்போது தான் என்னை போல் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் அவர் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. உடல் அழகை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து அனுப்பி இளைஞர்களை அவரது வலையில் சிக்க வைத்திருக்கிறார். தனது உடல் அழகைக் காட்டி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, மேகலாவிடம் கேட்டால் 'நான் விலை மாது. இது எனக்கு வழக்கமானது. நீ ஏமாந்தால், நான் என்ன செய்ய முடியும்' என்கிறார். இதுகுறித்து, சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் மூலம், மேகலாவிடம் பேசினேன். ஆனால், ராஜா அவருடன் சேர்ந்து என்னை மிரட்டி, கட்டாய தாலி கட்டச்செய்தார். அதை படம் எடுத்து வைத்துக்கொண்டு மேலும், 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நான், மேகலாவிடம் இழந்த பணம், நகை, பொருட்களை மீட்டுத்தர வேண்டும்’’ என அந்தப்புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார் பாலமுருகன். 

இந்தப்புகார் குறித்து விசாரிக்க, சேலம் டி.எஸ்.பி சங்கரநாராயணன் விசாரித்து வந்தார். முதல்கட்ட விசாரணையில், அவர்கள் இடையே திருமணம் நடந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் அழைத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே பாலமுருகன் மீது, மல்லூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், மேகலா புகாரளித்துள்ளார். அதில், தனது படங்களை பல ஆண்களுடன் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டு, தன்னை கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனால், பாலமுருகன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து புதுமாப்பிள்ளை பாலமுருகன் தலைமறைவாகி இருக்கிறார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.