கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் சசிதரன் வயது 57. இவரது மனைவி சுதா. வயது 47. இந்த தம்பதியினருக்கு பிரசாந்த் (25) என்கிற மகன் இருக்கிறார். சசிதரன் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் சசிதரனின் காலில் காயம் அடைந்ததால் தற்போது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

பிரசாந்த் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சுதாவின் தம்பி சுரேஷ்(45). இவர் லாரி ஓட்டுனராக தொழில் பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் அதிகமான குடி பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவர் குடிப்பது அதுமட்டுமில்லாமல் தனது அக்காள் கணவரான சசிதரனையும் தினமும் அழைத்துச்சென்று குடிக்க வைத்திருக்கிறார். இதை சுதா பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் சுரேஷ் கேட்கவில்லை என்று தெரிகிறது.

சம்பவத்தன்றும் உடல்நிலை சரியில்லாத சசிதரனை சுரேஷ் குடிக்க அழைத்துச் சென்றிருக்கிறார். இதனால் சுரேஷுக்கும் சுதாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது மகன் பிரசாந்திடம் இது பற்றி சுதா கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் தனது தாய்மாமாவான சுரேஷ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபம் அடைந்த சுரேஷ் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாந்தின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரசாந்தை உறவினர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார், பிரசாந்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு காவல்துறையினர் பிரசாந்தின் தாய்மாமாவான சுரேசை கைது செய்தனர்.

வாலிபரை, தாய்மாமனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.