கோட்டயம் அருகே கஞ்சா போதையில் காதல் மனைவியை கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருகச்சால் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மோஹனன். இவருடைய மகன் சுபின், கோட்டயம் மாவட்டம் ராணி ஊத்திமூடு பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். அஸ்வதி பிளஸ்-2 படித்து வந்த போது தனது பெரியம்மா வீட்டிற்கு லீவுக்கு வந்துள்ளார், அப்போது அருகில் வசித்து வந்த சுபினுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

இதனால், இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொண்டு மோஹனன் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வந்தனர். சுபினுக்கு கஞ்சா பழக்கம் இருப்பது அஸ்வதிக்கு தெரிய வந்தது. இதையொட்டி அவர் கணவரை கண்டித்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்த சுபின் மீண்டும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் அஸ்வதியை சரமாரியாக தாக்கி அவருடைய தலையை சுவற்றின் மீது தள்ளியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை தடுக்க வந்த மோஹனன், அவருடைய மனைவி குஞ்சுமோல் ஆகியோரையும் சுபின் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் மோஹனனும், குஞ்சுமோலும் சேர்ந்து அஸ்வதியை மீட்டு கருகச்சால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த சுபின் அங்கு பணியில் இருந்த பெண் டாக்டரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபின் கத்தியால் தனது கையையும் வெட்டி தற்கொலைக்கு முயன்றார். 

இதுகுறித்து, தகவலறிந்தத  சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுபினை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதற்காக ஜீப்பில் ஏற்றினார்கள். அப்போது தனது கையால் போலீஸ் ஜீப்பின் கண்ணாடியை உடைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கோட்டயத்தில் உள்ள மனநலன் காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா போதையில் மனைவியை கொலை செய்து தடுக்க வந்த தனது பெற்றோரையும் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.