’பெண்களைச் சீரழிப்பதை கணக்கு வைத்துக்கொண்டு அதில் செஞ்சுரி அடிக்க விரும்பிய விபரீதமான காமக்கொடூரன் ஒருவனை கேரள போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது 68 வது சீரழிப்பு முயற்சியோடு அவரது கதை முடிந்தது.

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், சில  தினங்களுக்கு முன் கோட்டயம் எஸ்பி ஹரிசங்கரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘ஒரு வாலிபர் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி, அந்த ஆபாச படத்தை என் கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி, என்னை பலமுறை பலாத்காரம் செய்தார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இதையடுத்து, இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த கோட்டயம் அரிப்பரம்பு பகுதியை சேர்ந்த பிரதீஷ் குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தியபோது திரைப்பட செக்ஸ் கிரைம் திரில்லர்களை மிஞ்சும் பரபரப்பான செய்திகள் கிடைத்தன. பிரதீஷ் குமார் முதலில் தன்னுடைய வலையில் வீழ்த்தவேண்டிய பெண்களை தேர்ந்தெடுப்பார். பெரும்பாலும் திருமணமான பெண்களுக்கே குறி வைப்பார். பின்னர், வலிய சென்று நட்பை ஏற்படுத்தி கொண்டு, போன் நம்பரையும் வாங்கி கொள்வார். அந்த பெண்ணிடம் சகஜமாக பேசி குடும்ப பிரச்னைகளை தெரிந்து கொள்வார்.

இதன் பின் அவரது கணவருக்கு மற்ற பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ஏமாற்றுவார். இதற்காக பிரதீஷ் குமார் பெண்கள் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கை தொடங்கி, அதில் இருந்து தான் பேசி வரும் பெண்களின் கணவருடன் சாட்டிங் செய்வார். இந்த சாட்டிங்கை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இளம்பெண்ணுக்கு அனுப்பி வைப்பார். இதை பார்த்ததும் தனது கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக இளம்பெண் கருதுவார். இதையடுத்து, குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். இதை பயன்படுத்தி அந்த பெண்ணுடன் பிரதீஷ் குமார் நெருக்கமாவார்.

இதன்பிறகு அந்த  பெண்ணுடன் வீடியோ  சாட்டிங் செய்வார். அதன்மூலம் அந்த பெண்ணின்  புகைப்படத்தை அவர் பதிவு செய்து வைத்து கொள்வார். பிறகு அந்த புகைப்படத்தை மார்பிங் மூலம் நிர்வாணப் படமாக்குவார். அந்த படத்தை அவரது  கணவருக்கு அனுப்பி வைப்பதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்வார்.  இப்படி கடந்த 2 வருடங்களில் இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம்  செய்துள்ளார். சமீபத்தில் இவரது வலையில் சிக்கிய ஒரு பெண்ணிடம், ‘நீ எனக்கு 68வது ஆள். 2021க்கு முன் 100 பெண்களை சீரழிப்பேன்’ என்று  சபதம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பிரதீஷ் குமாரைக் கைது செய்த போலீஸார் அவரது லேப் டாப்பை சோதனை செய்தபோது அதில் 65க்கும் மேற்பட்ட பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட நிர்வாணப் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன.