தெலுங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்தனர். இதனிடையே இன்று யாரும் எதிர்பார்க்காத விதமாக குற்றவாளிகள் நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொலை நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை காவல்துறையினர் அழைத்து சென்ற போது நான்கு பேரும் காவலர்களை தாக்கி தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது வேறு வழியின்றி பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை போலீசார் சுட்டதில், நான்கு பேரும் உயிரிழந்தனர். இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வழங்கப்பட்டிருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தெலுங்கானா என்கவுண்டருக்கு முன்னோடியாக  தமிழகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு கோவையில் முஸ்கின் (11 வயது ) , ரித்திக் ( 8 வயது) என்ற அக்கா, தம்பி இருவரும் வேன் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்தப்பட்டனர் . பின் சிறுமி முஸ்கின், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது தம்பியுடன் வாய்காலில் தள்ளி மோகன்ராஜ் மற்றும் மனோகர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் 2010 ம் ஆண்டு நவம்பர் 9 ம் தேதி அதிகாலையில் விசாரணைக்கு அழைத்து செல்லும் போது போலீசார்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற மோகன்ராஜ் என்கவுண்டரில்  சுட்டுக்கொல்லப்பட்டான். 

அப்போதும் கோவை மக்கள் போலீசாரை பெரிதும் பாராட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆக, தெலுங்கானா என்கவுண்டருக்கு முன்னோடியாக தமிழகம் விளங்கி கொண்டிருக்கிறது.