தன்னை விட்டு தனது கள்ளக்காதலன் பிரிந்து சென்று விடுவாரோ என்கிற சந்தேகத்தில் தனது மகளையே கள்ளக்காதலனுக்கு கள்ளக்காதலி திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் ஞானமணி நகரை சேர்ந்தவர் கண்ணன்.  48 வயதான இவர்  தனது அத்தை மகளான மஞ்சுளா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 19 வயதுள்ள ஒரு மகனும், 12 வயது ஒரு மகளும் உள்ளனர். கண்ணன் கட்டிட தொழில் செய்து வருகின்றார்.

கடந்த 2005 ஆண்டு அவரது சொந்த ஊரான வந்தவாசியில் உள்ள தென்னகரத்திற்கு சென்று கட்டிட வேலை செய்து வந்தார். அப்பொழுது 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, வந்தவாசியில் இருந்து கூட்டி சென்றுள்ளார். சிறுமியை காணவில்லை என்று வந்தவாசியில் உள்ள சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது சிறுமியை பொழிச்சலூரை சேர்ந்த கண்ணன் தான் கூட்டி சென்றுள்ளார் என்று தெரியவந்தது. இதனையடுத்து வந்தவாசி போலீசார் சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் 3 மாதங்களாக கண்ணனைத் தேடி வந்தனர். பின்னர் அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து பெங்களூருக்கு சென்று கண்ணனை கைது செய்து, சிறுமியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தனர்.

பாதிக்கப்பட்டது சிறுமி என்பதால் சிறுமியின் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி புகாரை திரும்பப் பெற்றனர். பின்னர் சங்கர் நகர் போலீசார் கண்ணனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்.

பின்னர் 2018 -ம் ஆண்டு ஊரப்பாக்கத்தில் ஒரு கட்டிட வேலைக்கு கண்ணன் சென்றுள்ளார். அங்கு கட்டிட பணியின் போது செங்கல்பட்டை சேர்ந்த யுவராணி என்ற 40 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ள தொடர்பு குறித்து கண்ணனின் முதல் மனைவிக்கு சுமார் ஒரு வருடத்துக்கு பிறகு தெரிய வந்தது. பின்னர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து கண்ணனின் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.

 


புகாரை விசாரித்த போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முதல் மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.மீண்டும் ஓரிரு மாதங்கள் கழிந்து கள்ளத்தொடர்பை கண்ணன் தொடர்ந்துள்ளார். எங்கே தனது கள்ளக்காதலை கண்ணனின் முதல் மனைவி மீண்டும் பிரித்து விடுவாரோ என நினைத்து எண்ணி, தனது 19 வயது மகளை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தகவல் ஓரிரு மாதங்கள் கழித்து கண்ணனின் முதல் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து. இவர் தொடர்ந்து இப்படி செய்துவருகின்றனர் என்று தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட மகளிர் காவல் நிலைய போலீசார் கண்ணன் மற்றும் அவரது கள்ளக்காதலி, கள்ளக்காதலியின் மகள் மூவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கள்ளக்காதலியின் 19 வயது மகள் எட்டுமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது தெரியவந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி கண்ணனை தன் முதல் மனைவியோடு மகளிர் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

முதல் மனைவியின் வீட்டுக்கு வந்த மறுநாளே, கள்ள காதலியை தேடி கண்ணன் சென்றுவிட்டார். இனி இவருடன் வாழக் கூடாது என்று கண்ணனின் முதல் மனைவியான மஞ்சுளா எண்ணியிருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணவன் மற்றும் அவரது கள்ளக்காதலி இடமிருந்தும் முதல் மனைவிக்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுத்தும் மற்றும் தவறான வார்த்தைகளை பேசியதால் மனமுடைந்த முதல் மனைவி மஞ்சுளா பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்னர் உறவினர்கள் மஞ்சுளாவை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கண்ணனின் மகன் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் கண்ணன் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாச வார்த்தை பேசுவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கைது செய்துள்ளனர்.