தர்மபுரி மாவட்டம் பாலகோடு அடுத்த சிக்கமாரண்டஅள்ளி ரயில் தண்டவாளத்தில் கடந்த 8ந்தேதி கை, கால், தலை என உடல் பாகங்கள் தனி தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலமும் அருகில் சேதமடைந்த நிலையில் இரு சக்கர வாகனம் ஒன்றும் கிடந்தது.

தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட போஸ்ட்மார்ட்டத்தில் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர் பாலக்கோடு அடுத்த உலகனஅள்ளி கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் ஆறுமுகம் என்பது தெரியவந்தது. ஆறுமுகத்திற்கு திருமணமாகி ஒரு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ள நிலையில், ராதா என்ற பெண்ணுடன்  அவர் கள்ளத் தொடர்பு  வைத்திருந்தார்.

இதையடுத்து சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் சோளக்காட்டுக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இருட்டான பிறகு  அவர்கள் இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அந்த சோளக்காட்டில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பன்றிகள் அட்டகாசத்தை ஒழிப்பதற்காக காட்டின் உரிமையாளர் சின்னசாமி மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் கையில் வேட்டை துப்பாக்கியுடன் வலம் வந்துள்ளனர்.

அப்போது சோளத் தட்டை  அசைவதை பார்த்து காதல் ஜோடி இருப்பதை அறியாமல் பன்றிகள் தான் சோளக்காட்டுக்குள் பதுங்கி இருப்பதாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் துப்பாக்கி குண்டு ஆறுமுகத்தின் உடலை துளைத்து அருகிலிருந்த ராதாவின் உடலில் பாய்ந்துள்ளது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து அவர்கள் இருவரும் ஆறுமுகத்தின் சடலத்தை மூட்டையில் கட்டி தண்டவாளத்தில் வீசியுள்ளனர். ரெயில் சென்ற வேகத்தில் ஆறுமுகத்தின் சடலத்தையும், இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி துண்டு துண்டுகளாக்கி கடந்துள்ளது..

இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த ராதாவை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த சின்னசாமி மற்றும் சண்முகம் ஆகியோர் யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்  உண்மையை அம்பலப்படுதியுள்ளது. இதையடுத்து சின்னசாமி, சண்முகம், ராதா மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்