கோவையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கள்ளக்காதலியை கொடூரமாக துடிதுடிக்க அடித்து கொலை செய்து பயத்தில் கோழிக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காளப்பட்டி நேருநகர் 6-வது வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (37). இவர் அந்தப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து, பத்மநாபனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதேபோல், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே, பத்மநாபன் மற்றும் திலகவதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியுள்ளது.  இருவர் வீட்டிலும் யாரும் இல்லாததால் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பத்மநாபன், திலகவதியை வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இதை அறிந்த பத்மநாபன்-திலகவதியின் உறவினர்கள் தலையிட்டு, 2 பேரும் சந்திக்கக்கூடாது, அவரவர் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும், அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்துக்கொள்வதை நிறுத்தவில்லை.  காளப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இருக்கும் ஒரு அறையில் பத்மநாபன் தனது நண்பர்களுடன் கேரம்போர்டு விளையாடுவது உண்டு. அந்த அறையில்தான் அவர் திலகவதியை சந்திப்பதும் உண்டு.

 இந்நிலையில் அவர் நேற்று திலகவதியை அந்த அறைக்கு அழைத்து வந்தார். மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பலமுறை கூறியும் அவர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால் பத்மநாபனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே அங்கு கிடந்த சம்மட்டியை எடுத்து திலகவதி தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.