விழுப்புரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியும், கள்ளகாதலனும் இணைந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் அருகிலுள்ள வி.அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமரன் (35). இவர் அதே ஊரைச் சேர்ந்த 30 வயதான லதா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் சங்கவி என்ற பெண் குழந்தை உள்ளது. சொந்தமாக கார் வாங்கி விழுப்புரத்தில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜகுமரனின் அண்ணன் முத்துகுமரன் வீட்டுக்கு சென்ற லதா ராஜகுமரன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடப்பதாக கதறியபடி கூறியுள்ளார். இதனையடுத்து, உள்ளூர் மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து ராஜகுமரனை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து ராஜகுமரன் மனைவியிடம் எப்படி இறந்தான் என்று உறவினர்கள் கேட்டபோது முதலில் தனக்கு எதுவும் தெரியாது என சொன்ன லதா, பின்னர் ராஜகுமரனுக்கு காது வலி தாங்க முடியாமல் தானாகவே கழுத்தை அறுத்துகொண்டதாக கூறினார். இதனால், குடும்த்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜகுமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ராஜகுமரன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. மேலும், ராஜகுமரனின் அண்ணன் முத்துக்குமரன் தம்பி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகுமரனின் மனைவி லதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கணவரை கொலை செய்ததை லதா ஒப்புக்கொண்டார். மேலும், கணவரின் நண்பரான ரஞ்சித்திற்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தனிமையில் இருக்கும் போது உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்ததால் கணவர் ராஜகுமரன் இருவரையும் கண்டித்துள்ளார்.. இருப்பினும் இருவரின் பழக்கமும் தொடர்ந்தது. 

இந்நிலையில், கடந்த வாரம் இரவு பணிநிமித்தமாக செஞ்சி சென்ற ராஜகுமரன் இரவு ஒரு மணியளவில் திடீரென வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மனைவி லதா உடன் ரஞ்சித் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, மது போதையில் இருந்த ராஜகுமரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த ரஞ்சித் மற்றும் லதா இருவரும் சேர்ந்து ராஜகுமரனின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்ததாக கூறியுள்ளார். கள்ளக்காதலுக்காக கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.