தனியார் வங்கி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் நடத்திய விசாரணையில்;  பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவரது மகன் கிருஷ்ணகுமார் மகாலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஒன்றின் வாடிக்கையாளர். இதனால் அடிக்கடி வங்கிக்கு சென்று வந்துள்ளார். அதே வங்கியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.

அந்த பெண்ணை பார்த்ததும் கிருஷ்ணகுமாருக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவரிடம் சென்று கல்யாணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் கிருஷ்ணகுமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் செல்வகுமாரின் டார்ச்சரிலிருந்து தொல்லை கொடுப்பதால், விரக்தியின் உச்சத்திலிந்த அந்த பெண் வேலையை விட்டு விலகி ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.

இதை அறிந்த கிருஷ்ணகுமார் மற்றும் 4 பேர் வங்கிக்கு வந்தனர். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து அந்த பெண் மகாலிங்கபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். போலீசில் அந்த பெண் புகார் கொடுப்பதை அறிந்த கிருஷ்ணகுமார் உள்பட 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவரது வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதையடுத்து  இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தலைமறைவாக உள்ள 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். வங்கி பெண் ஊழியருக்கு, முன்னாள் கவுன்சிலர் மகன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.