குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் போக்சோ சட்டத்தில் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 10 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனையும் உள்ளடக்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தில் திருத்தங்கள் சிறுவர் ஆபாசத்தைத் தடுக்க அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்குகின்றன. கடுமையான தண்டனை வழங்குவது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், குழந்தைகளின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இதுபோன்ற கடுமையான தண்டனை அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

நாட்டில் மக்கள் பல அங்கீகரிக்கப்படாத, முறைகேடான நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்து பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க ‘முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை-2019’ என்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு சட்டமசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் கள்ளத்தனமான டெபாசிட் திட்டங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும், இந்த குற்றத்துக்கு தண்டனை வழங்குவது, டெபாசிட் பணத்தை மக்களிடம் திரும்ப ஒப்படைப்பது ஆகியவற்றுக்கும் இதில் வழிவகை காணப்பட்டுள்ளது.