குட்கா வாங்கினால் வெள்ளி நாணயம் இலவசமா வழங்கப்படும் என கவர்ச்சி விளம்பரம் செய்த வாலிபரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் என கூறப்படுகிறது. ஈரோட்டில் கொங்காலம்மன் கோயில் அருகே மனோஜ் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இங்கு சில வாலிபர்கள், மறைமுகமாக பொருட்களை வாங்கி செல்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்று, அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், அங்கு எவ்வித பொருட்களும் சிக்கவில்லை. பின்னர், கடையின் படிக்கட்டு கீழே சோதனை செய்தபோது, அங்கு பெரிய அளவிலான பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். 

அந்த பண்டல்களை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 110 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு பல லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் மனோஜிடம் விசாரித்தபோது, 10 பாக்கெட் குட்கா பொருட்கள் வாங்கினால், வெள்ளி நாணயம் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இவரிடம் குட்கா பொருட்களை வாங்கி சென்றனர் என தெரிந்தது. தொடர்ந்து அதிகாரிகள், மனோஜிக்கு யார் குட்கா பொருட்களை சப்ளை செய்வது, சமீபத்தில் கைது செய்யப்பட்ட மாதவராவுன் இருக்கு தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.