நித்யானந்தா விரைவில் பிடிபடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி விசாரித்த போது, தன் இரண்டு மகள்களை நித்தியானந்தா கடத்தி வைத்துக் கொண்டு பாலியல் ரீதியில் டார்ச்சர் செய்துவருவதாக, நித்தியின் முன்னாள் சீடர் ஜனார்த்தன சர்மா, குஜராத்தில் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கைகள் வேகமெடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

குருகுலப் பள்ளி என்கிற பெயரில் பல மாநிலங்களிலும் பள்ளிக்கூடம் நடத்திய நித்தி, அதற்கான அப்ரூவலை கர்நாடகத்தில் தான் வாங்கியிருந்தார் என்று கூறுகின்றனர். ஆனால் 2016லேயே இந்த அப்ரூவல் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. 
 
இதைத் தெரிந்து கொண்ட குஜராத் போலீஸார், அங்கே அகமதாபாத் அருகே ஹீராபூரில் நித்தி தரப்பு நடத்திவந்த குருகுலப் பள்ளியை 2 ஆம் தேதி அதிரடியாக இழுத்து மூடிவிட்டனர். மேலும் குஜராத் உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில், இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ஈக்வெடார் நாட்டில் பதுங்கியிருக்கும் நித்தியானந்தாவை சுற்றிவளைக்கும் முயற்சியில், அங்குள்ள காவல்துறை இறங்கியிருக்கிறது. நித்தி மீதான, மைனர் குழந்தைகளை செக்ஸ் வேட்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை குஜராத் போலீஸ் சீரியஸாக எடுத்துக்கொண்டதால் தான் இத்தனை வேகம் என்கின்றனர். இதனால் எந்த நேரத்திலும் நித்தியானந்தா பிடிபடலாம் என்கிறார்கள் அங்குள்ள போலீஸ் வட்டாரங்கள்.