ஓசூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நாரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனப்பா (65). செங்கல் சூளை தொழிலாளி. இவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை வளர்த்து வந்தார். இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பள்ளிக்கு சென்ற போது மிகவும் சோர்ந்து காணப்பட்டார். இதனையடுத்து, சிறுமியிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். 

அப்போது தனது வளர்ப்பு தந்தை சீனப்பா பல முறை தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு நாகேஷ் (40) என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியதையடுத்து ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, சீனப்பாவையும், உடந்தையாக இருந்த நாகேசையும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது வளர்ப்பு தந்தைக்கு போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த நாகேசிற்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.