நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை கற்பழித்து, கொலை செய்து உடலை எரிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் நிகழ்ந்த ஐதராபாத் , உன்னாவ் சம்பவங்கள் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இம்மாதிரியான சம்பவங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் அஹியாபூர் நகரம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் அங்கு வந்து, வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அப்பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார். ஆனால் அப்பெண் அவரை எதிர்த்து போராடியுள்ளார். 

இறுதியில் ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தகவல் அறிந்த அப்பெண்ணின் தாயார் வீட்டிற்கு வந்து தனது மகளை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்.

50 சதவீத தீக்காயங்களுடன் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரின் பக்சார் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் கடந்த வாரம் இரு பெண்களின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. 

இதேபோல் அஹியாபூர் பகுதியில் 8 வயது சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பைகளில் அடைக்கப்பட்டு பழத்தோட்டத்தில் வீசப்பட்டதும் கண்டறியப்பட்டது. அப்பெண்களும், சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.