தமிழகத்தில் மீண்டும் பெண் சிசுக்கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆண்டிபட்டி அருகே பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையை கொன்ற தாய் கவிதா மற்றும் மாமியார் செல்லம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்பவர் சுரேஷ். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயது மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

இதனையடுத்து 3-வதும் பெண் குழந்தை பிறந்ததாள் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பிறந்து 6 நாட்களே ஆன குழந்தைக்கு யாருக்கும் தெரியாமல் எருக்கம்பால் கொடுத்து வீட்டின் அருகிலேயே அடக்கம் செய்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட குழந்தை நல அலுவலகத்திற்கும், காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்தனர். 

புகாரின் அடிப்படையில் தாசில்தார் சந்திரசேகர் மொட்டனூத்து கிராமத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தம்பதியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தம்பதியினர் இதுகுறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆகையால், குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, தாய், தந்தை, பாட்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் தாய் மாமியார் தூண்டுதலின் பெயரிதான் இதை செய்தோம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே மதுரை உசிலம்பட்டியில் நடந்த நிலையில் தேனியில் மீண்டும் பெண் சிசுக்கொலை நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.